கார்த்திகா ஜோதிடப் அறக்கட்டளை

கார்த்திகா வித்யாபவன் அறக்கட்டளையின் கீழ் இயங்கும் பல துறையிலுள்ள சேவைப் பிரிவில் முக்கிய அங்கம் வகிப்பது கார்த்திகா ஜோதிடப் பேரவை என்ற சேவைப் பிரிவாகும். செயலாளர், பொருளாளர், மக்கள் தொடர்பு அலுவலர், செயற்குழு உறுப்பினர்கள் ஆகிய செயல் அலுவலர்களைக் கொண்ட இந்த பேரமைப்பு ஆயிரக்கணக்கான உறுப்பினர்களைக் கொண்டது. கார்த்திகா வித்யாபவன் அறக்கட்டளை, கார்த்திகா ஜோதிடப் பயிற்சி நிலையம் மற்றும் பல நிறுவனங்களை நிறுவிய பெருந் தலைவராக குருஜி அவர்கள் இப் பேரவைக்கு தலைமைப் பொறுப்பேற்று நிரந்தரத் தலைவராக அங்கம் வகிக்கிறார். செயலாளர், பொருளாளர், மக்கள் தொடர்பு அலுவலர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஆகிய சேவைப் பிரிவு அலுவலர்கள் ஒவ்வொரு தமிழ் ஆண்டின் சித்திரை மாதம் முதல் தேதியன்று கார்த்திகா ஜோதிடப் பயிற்சி நிலையத்தில் நடைபெறும் செயற்குழு மற்றும் பொதுக் குழுக் கூட்டத்தின் பொழுது தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள்.
தேர்தல் முடிந்த அன்றைய தினம் பதவி ஏற்புக்குப் பின்னர் ஆன்மீக சேவையாகிய ஆன்மீக சுற்றுப் பயணத்திற்கு ஏற்பாடு செய்தல், குரு பெயர்ச்சி, சனிப் பெயர்ச்சி, ராகு, கேது பெயர்ச்சி போன்ற கிரஹ மாற்றங்கள் ஏற்படும் காலத்தில் பிரம்மாண்டமான ஹோமங்கள் மற்றும் பூஜைகளை ஏற்பாடு செய்தல், இலவச ஜோதிட முகாம் நடத்துதல் இன்னும் பல ஆன்மீக பொது சேவையில் ஈடுபட்டு தொண்டாற்றுதல், நலிந்தோருக்கு உதவுதல் போன்ற சேவை செயல்பாடுகளுக்கு முன்வரைவு திட்டத்தின் கருத்துரு தயாரிக்கப்பட்டு பேரவையால் ஒப்புதல் பெறப்படுகிறது. ஆன்மீக பெருமக்களுக்கும், நலிந்தோருக்கும் சேவை செய்வது இறைவனைப் பணிந்து வழிபாடு செய்வதற்கு ஒப்பாகும் என உபதேசிக்கும் நிறுவனத் தலைவர் குருஜி அவர்களின் கொள்கைகளை நிறைவேற்றுவதே இந்தப் பேரவையின் தலையாய திருப்பணியாக உள்ளது. தனி நபர் மேம்பாடு என்பதில் இந்தப் பேரவை மிகவும் கவனம் செலுத்துகிறது.
பிள்ளையார் சுழி, அதன் கீழ் ஓம் என்ற ப்ரணவ மந்திரம், பின்னர் ஸ்ரீ கோமதி சங்கர நாராயணாய நம : என்ற வழிபாட்டு சொற்கோவை, அதன் பின் அருஉருவாகிய பரமேஸ்வரன் குடி கொண்டிருக்கும் சிவலிங்கம், இடவலமாக ஆபத்தை முன்னறிவிக்கும் சங்கும், தீயனவற்றை அழிக்கும் சக்கரமும் மஹா விஷ்ணுவின் திரு அடையாளமாக உள்ளதென ஏற்று அதன் மத்தியில் முருகப் பெருமானின் வேலுடன் இணைந்த மஹா சக்தியின் சூலாயுதம் ஆகிய அனைத்தையும் கொண்ட சைவ, வைஷ்ணவ சம்பிரதாய பேதமற்ற இணைவு பிம்பங்களை குருஜி அவர்கள் இந்த நிறுவனத்திற்கு அடையாளச் சின்னமாக அறிவித்துள்ளார்கள். இப்பூவுலகிலுள்ள அனைத்திற்கும் இறைவன் ஒருவனே மூலாதாரம் என்றும், இவ்வுலகில் உள்ள அனைத்தும் இறைவனால் மனிதனுக்கு வழங்கப்பட்ட அன்பளிப்பு என்றும், எவ்வித பேதமும் எந்தக் குறையும் இன்றி மனித குலம் வாழ வேண்டும் என இறைவன் விரும்புகிறான் என்பதும் இதன் பொருள். இந்த சூத்திரத்தை அருளிய குருஜி அவர்கள் ஆன்மீக உணர்வும், தர்ம சிந்தனையும், நலிந்தோருக்கு உதவும் உள்ளமும் கொண்ட இப் பேரவையின் அனைத்து உறுப்பினர்களும் முக்கிய சேவைகளில் ஈடுபடும் பொழுது மஞ்சள் ஆடை, நெற்றியில் செஞ்சாந்து ஆகியவற்றை அணிந்து ஈடுபட்டால் எடுத்த எந்த நற்காரியமும் சீராகவும் சிறப்பாகவும் நிறைவு பெறும் என போதனையும் செய்துள்ளார்கள்.
கார்த்திகா ஜோதிடப் பயிற்சி நிலையத்தில் ஜோதிடப் பயிற்சி பெற்ற அனைத்து மாணவ மணிகளும் இப் பேரவையின் உறுப்பினர் ஆகிறார்கள். சேவை உள்ளம் கொண்ட எவரும் கார்த்திகா ஜோதிடப் பேரவையில் உறுப்பினர் ஆகலாம். அதுமட்டுமன்றி உறுப்பினர் கட்டணம் என இதுவரை பேரவையால் எந்தத் தொகையும் நிர்ணயிக்கப்படவில்லை. பிற் காலங்களில் உறுப்பினர் கட்டணம் தேவை எனில் பேரவை தீர்மானத்தின் பேரில் அது குறித்து பரிசீலிக்கப்படும். அதுவரை கட்டணம் இன்றியே பேரவை உறுப்பினராக தங்கள் பெயரை பதிவு செய்து கொள்ளலாம். பின்வரும் மாதிரிப் படிவத்தை பூர்த்தி செய்து கார்த்திகா ஜோதிடப் பயிற்சி நிலையத்திற்கு அனுப்பி வையுங்கள். இப் பேரவையின் சேவைப் பணி குறித்த அனைத்து விபரங்களும் அவ்வப் பொழுது தங்களுக்குத் தெரிவிக்கப்படும். கார்த்திகா ஜோதிடப் பேரவையில் இணைந்து தெய்வ சேவையும், மக்கள் சேவையும் செய்து இப்பிறவியில் புண்ணியங்கள் பல பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

கார்த்திகா ஜோதிடப் பேரவை உறுப்பினர் விண்ணப்ப படிவத்தை download செய்ய இங்கு Click செய்யவும்

Scroll to Top