பயிற்சி நிலையம்
பலாநி க்ரஹ சாரேண ஸுசயந்தி மநீஷிண :/
கோ வக்தா தாரதம்யஸ்ய தமேகம் வேதஸம் விநா//
ஜோதிடர்கள் கிரஹங்களின் அசைவுகளைக் கொண்டு அதன் பலாபலன்களை முன்கூட்டியே அறிவித்து விடுகின்றனர். இதுவன்றி, பிரம்மாவைத் தவிர வேறு எவராலும் இதுதான் நடக்கும் என்று கூறிவிட முடியாது.
வேதத்தின் ஆறு பாகங்களில் ஒன்றான ஜோதிடம் இயற்கையின் ரகஸியங்களை சரியாக முன்னுணர்ந்து சொல்லும் கலையாகத் திகழ்கிறது. நமது இந்திய நாட்டில் ஜோதிடம் மூன்று பிரிவுகளாக உள்ளன. பராசரர் முறை, ஜைமினி முறை, தாஜக முறை என்று இவை அழைக்கப்படுகின்றன. ஜைமினி முறை தற்பொழுது முழுமையாக புழக்கத்தில் இல்லை. தாஜக முறை ராஸி பலன் அறிய பயன்படுகின்ற கோட்சாரம் என்ற முறைக்குட்பட்டது. பராசரரின் முறைதான் தற்பொழுது நமது நாட்டினரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்பூவுலகிற்கு நாரதர் இக்கலையை அருளிச் செய்தார் என்பது புராணம். அதன் பின்னர் வழிவழியாய் சௌனகர், வசிஷ்டர், அத்திரி, மனு, புலஸ்தியர், அங்கிரஸ், வியாசர், ரோமேசர், மரீசி, சியவனர், யவனர், காசியபர், பராசரர், வராஹமிஹிரர், ஸ்ரீபதி, ஸத்யாச்சாரி, பாஸ்கரர், ரேணுகர், வைத்தியநாதர், பிரம்மகுப்தர் ஆகியோர் ஜோதிட ஆராய்ச்சியை கிரஹ நிலையைக் கொண்டு வளர்த்தனர் என்பது சரித்திரம். பாரசீகத்தில் அல்ஹாகீம், முகம்மதியர் நாட்டில் இயூகீன் ஷியூக், அப்துல்லா ஷீஸீஹ் போன்றோர் ஜோதிடத்தில் சிறந்து விளங்கினர். ரோமாபுரியில் அப்பல்லோனியஸ் சிறந்த வானவியல் ஜோதிட நிபுணராகக் கருதப்பட்டார். தென்னிந்தியாவில் பல சித்தர்கள் வருங்காலத்தை முன்னுணர்ந்து கூறினர். அவர்களின் படைப்புகளையே இன்று நாம் பயன்படுத்தி பலன் அடைந்து வருகிறோம்.
ஜோதிடக் கலை
இப்படிப்பட்ட ஜோதிடக்கலை ஆண்டவனால் மானிடருக்கு அருளப்பட்ட ஒரு மாயக்கண்ணாடி ஆகும். ஆஸ்திக மக்களால் போற்றப்படும் இக்கலையை நாஸ்திகரும் ஏற்றுக்கொள்ளும் காலம் வந்துவிட்டது. ஒருவருக்கு ஜோதிடம் தெரியும் என்று அறிந்த மாத்திரத்திலேயே அவரைச் சுற்றி மக்கள் திரள்வதை கண்கூடாகக் காண்கிறோம். எல்லோருக்கும் தமது எதிர்காலத்தை அறிந்து கொள்ளும் ஆசை உண்டு என்பதை இது உணர்த்துகிறது அல்லவா? நல்லாதாயின் மகிழ்ச்சியும், கெட்டதாயின் எச்சரிக்கையுடன் செயல்படவும் ஜோதிடம் ஒரு ஜோதியாகத் திகழ்கிறது. இந்த ஜோதி ஒவ்வொரு குடும்பத்திலும் ஏற்றப்பட வேண்டியதொன்று. ஜோதிடக் கலையின் இரகஸியங்கள் பல மறைந்து கொண்டு வருகின்றன. பல நூல் ஆராய்ச்சியும், பழைய ஏடுகளை புதுப்பித்து ஆய்வதும் தற்பொழுது தேவையாக உள்ளது. மேலை நாட்டினரின் சாயன முறைப்படியும் கிரஹங்களின் நிலையைக் கொண்டு நடக்க இருக்கும் நிகழ்ச்சிகளை முன்உணர்ந்து கூறிவிடலாம். நவகிரஹங்கள் இப்பூவுலக ஜனனங்கள் மீது எவ்வாறு ஆட்சி செலுத்துகின்றன என்பதைக் கூறும் இக்கலை மிகவும் உயர்ந்ததாகக் கருதப்படுகிறது. இறைவனை நேரடியாகக் காண இயலாவிட்டாலும் இறைவனால் நியமிக்கப்பட்ட கிரஹங்களும், பஞ்ச பூதங்களும் இறைவனை உணர்த்தி நமது வாழ்வில் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தி விடுகின்றன. தற்பொழுது ஒவ்வொரு இயல்களுக்கும் தனித்தனி படிப்பு, பட்டம், ஆராய்ச்சி என இருப்பது போல், ஜோதிடக் கலையையும் முறையான படிப்பு, பட்டம், ஆராய்ச்சி என்ற முறைகளுக்கு உட்படுத்த வேண்டும். இதன்படி அறியப்படும் கல்வி மிகவும் தீர்க்கமானது. தெளிவானது. அந்த ஒரு நிலையை உருவாக்கத்தான் நமது கார்த்திகா ஜோதிடப் பயிற்சி நிலையம் நிறுவப்பட்டுள்ளது.
-நிர்வாகி