ஜோதிடப் புத்தாண்டு விழா
இறைவனுள் அன்புடையீர், நலமே விளைக. தங்கள் அனைவருக்கும் நமது குருநாதர் அவர்களின் ஆசியுடன் கூடிய ஜோதிடப் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். மங்களகரமான விகாரி வருஷம் சித்திரை மாதம் 1-ஆம் தேதி (14-4-2019) ஞாயிற்றுக்கிழமை அன்று கார்த்திகா ஜோதிடப் பயிற்சி நிலையத்தில் நமது குருநாதர் அவர்களின் அறிவுரைப்படி நடக்கவிருக்கும் ஜோதிடப் புத்தாண்டு நிகழ்ச்சிகளை கீழே விளக்கியுள்ளோம். 1. ஜோதிடப் புத்தாண்டு நிகழ்ச்சி 14-4-2019 அன்று காலை 6-00 மணிக்கு கார்த்திகா ஜோதிடப் பயிற்சி நிலையத்தில் நடைபெறும் விசேஷ பூஜையைத் தொடர்ந்து காலை 8-00 மணிக்கு நமது குருநாதர் அவர்கள் கார்த்திகா ஜோதிடப் பயிற்சி நிலைய மாணவ மணிகள் அனைவருக்கும் தாம்பூலம் அளித்து வித்யா போதனையுடன் ஆசி வழங்க உள்ளார்கள். அன்று காலை 9-00 மணிக்கு நமது பாரம்பரிய நிகழ்ச்சியாகிய பஞ்சாங்கம் படித்தல் நடைபெறும். பின்னர் ஜோதிட ரீதியான இயற்கைச் சீற்றம், அரசியல், நாட்டின் நிலை, பொருளாதாரம், பொருட்களின் விலை ஏற்ற இறக்கம், பங்குச் சந்தை, விவசாயம், கல்வி, ஆன்மீகம் மற்றும் பல விஷயங்கள் மீதான ஜோதிட பலன்களை நமது குருநாதர் அவர்கள் அன்று தெரிவிக்க இருக்கிறார்கள். மேலும் பல புதிய ஜோதிட நுணுக்கங்களையும் அன்றைய தினம் நமது குருநாதர் அவர்கள் அறிவிக்க இருக்கிறார்கள். ஜோதிட சேவை செய்து வரும் தங்களுக்கு இந்த நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 2. செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் கார்த்திகா ஜோதிடப் பேரவையை திறம்பட இயக்குவதற்கு கார்த்திகா ஜோதிடப் பேரவையின் செயலாளர், பொருளாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்களின் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் நமது கார்த்திகா ஜோதிடப் பயிற்சி நிலைய மாணவ மணிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். 3. கிளை மேலாளர்களுக்கு அறிவுரை கார்த்திகா ஜோதிடப் பயிற்சி நிலையத்தின் கட்டுப்பாட்டில் பணிபுரிந்து வரும் கிளை மேலாளர்கள் 1-4-2019 முதல் 31-3-2020 முடிய உள்ள காலத்திற்கான தங்களது கிளை மேலாளர் பதவியை 31-3-2019 ஆம் தேதிக்குள் முறையாக விண்ணப்பித்து புதுப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். 4. புதிய ஜோதிட மாணவச் சேர்க்கை வரவிருக்கும் ஜோதிடப் புத்தாண்டில் புதிய ஜோதிட மாணவச் சேர்க்கை நடைபெற இருப்பதால் நமது கார்த்திகா ஜோதிடப் பயிற்சி நிலைய மாணவர் ஒவ்வொருவரும் ஒரு புதிய ஜோதிட மாணவரை நமது நிலையத்தில் சேர்த்து நமது நிலையத்தை பெருமை பெற செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம். இதற்கான விண்ணப்பப் படிவத்தையும் விளக்கக் குறிப்பையும் ரூ. 50/- செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். நமது நிலையத்தில் ஜோதிடப் பயிற்சியைத் தொடங்கி, பின்னர் பயிற்சியைத் தொடர இயலாமல் உள்ளவர்கள் மீண்டும் மறுபதிவுக் கட்டணம் ஏதுமின்றி வரும் ஜோதிடப் புத்தாண்டு முதல் ஜோதிடப் பயிற்சியை தொடருமாறு கேட்டுக் கொள்கிறோம். 5. சீருடை நமது நிலையத்தின் அடையாளமாகிய பொன்னிற மஞ்சள் சீருடையையும், நெற்றியில் செஞ்சாந்தையும் நமது நிலைய முக்கிய நிகழ்ச்சி காலங்களில் அணிந்து வாருங்கள். இந்தப் பொன்னிற மஞ்சள் சீருடை பிரபஞ்சத்திலுள்ள மென்மையான மின்காந்த சக்தியை ஈர்த்து உடல் ஆரோக்யத்தையும், தூய்மையான சிந்தனையையும், நுட்பமான அறிவையும், சகல சம்பத்துக்களையும், மன அமைதியையும் வழங்கும் ஆற்றல் கொண்டது. 6. குரு பெயர்ச்சி விகாரி வருஷம் ஐப்பசி மாதம் 11-ஆம் தேதி குரு பகவான் தனுசு ராஸிக்குப் பெயர்ச்சியாவதை முன்னிட்டு குரு பெயர்ச்சி பூஜைகளை சிறப்பாக நடத்த அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். இந்த குரு பெயர்ச்சி பூஜை ஹோமங்களில் ஆன்மீக அன்பர்களை பங்கேற்கச் செய்யும் தங்களின் சேவைப் பணிகளை இப்பொழுதிலிருந்தே திட்டமிட்டு தொடங்கி விடுங்கள். இதற்கு உதவிகரமாக உள்ள நமது நிலையப் படைப்புகளாகிய அருட்பிரசாதங்களின் விளக்கப் புத்தகம் மற்றும் நவகிரஹ ஸ்துதி புத்தகம் ஆகியவற்றை பயன்படுத்தி நமது நிலையத்தின் மூலம் நடைபெறுகின்ற பூஜைகளில் பங்கேற்கும் ஆன்மீக அன்பர்களுக்கு தக்க வழிகாட்டியாக இருந்து செயல்படுமாறு கேட்டுக் கொள்கிறோம். 7. வேண்டுகோள் ஜோதிடப் புத்தாண்டு விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர்கள் இடஒதுக்கீடு வசதிக்காக தங்களின் வருகையை இந்த அழைப்பு கிடைக்கப் பெற்ற மூன்று தினங்களுக்குள் நமது நிலையத்திற்குத் தவறாமல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். கார்த்திகா ஜோதிடப் பயிற்சி நிலையத்தில் நடைபெற இருக்கும் இந்த முக்கிய நிகழ்ச்சிகளில் நமது ஜோதிட மாணவர்கள் கலந்து கொண்டு குருவருளையும் திருவருளையும் பெற்றுச் செல்லுமாறு அன்புடன் அழைக்கிறோம். நலமே விளைக. நிர்வாகி முக்கிய செய்திகள்.