சனிப் பெயர்ச்சி பலன்கள்
ஸ்வஸ்திஸ்ரீ விசுவாவசு வருஷம் மாசி மாதம் 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை (6-3-2026) சனி பகவான் மீன ராஸியில் சஞ்சாரம் செய்யத் தொடங்குகிறார். இதனால் மாசி-22 முதல் சுமார் இரண்டரை ஆண்டு காலம் ஜனங்களுக்கு நடக்க இருக்கும் ஜோதிட பலன்களை கீழே விவரித்துள்ளோம்.
மேஷ ராஸி :
இது ஏழரைச் சனியின் தொடக்க காலமாகும். மிகுந்த பொருள் செலவு ஏற்படும். இக்காலத்தில் அநாவசிய அலைச்சலும், உறவினர்களால் துன்பமும் ஏற்படும். பிறரின் அதிருப்திக்கு ஆளாகும் நிலை உண்டாகும். பூர்வீகச் சொத்துக்களில் வில்லங்கம் ஏற்படும். பூமி, பொருட்கள் விரயமாகும்.
ரிஷப ராஸி :
இக்காலம் இவர்களுக்கு மகிழ்ச்சியானதாகவும், லாபகரமானதாகவும் இருக்கும். வீடு, மனை, நிலபுலன் சேர்க்கையாகும். உடன்பிறப்புகளால் ஆதரவு கிடைக்கும். புதிய தொழில் முயற்சி பலிதமாகும். அரசியல்வாதிகள் ஆதாயம் பெறுவர். வாகனங்கள் மிகுந்த லாபத்தைக் கொடுக்கும்.
மிதுன ராஸி :
பண விரயமும், சேமிப்புகளை எடுத்து செலவு செய்யும் நிலையும் ஏற்படும். உத்யோகத்தில் உள்ளவர்கள் எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும். எழுத்துத் துறையில் உள்ளவர்கள் சிரமத்தை சந்திப்பார்கள். இயந்திரங்களில் பணிபுரிவோர் கவனமாக செயல்படுதல் வேண்டும்.
கடக ராஸி :
இக்காலத்தில் புதிய தொழில் முயற்சிகள் பலன் தராது. பித்ரு வழி சொத்துக்கள் விரயமாகும். பெற்றோருக்கு ஆரோக்யக் குறைவு ஏற்படும். குடும்பத்தில் பிரிவும், கலகமும் ஏற்படும். தெய்வ வழிபாடு அதிகமாகத் தேவைப்படும் காலம் இது.
சிம்ம ராஸி :
இது அஷ்ட்டம சனி காலம். உடலில் நோயும், மருத்துவச் செலவும், சட்டத்திற்கு பதில் கூறும் நிலையும் ஏற்படும். வியாதியஸ்தர்களுக்கு இது ஒரு சோதனை காலமாகும். தொழில் மாற்றமோ அல்லது இருப்பிட மாற்றமோ ஏற்படும். சனி பகவான் தமது கடமையை தவறாமல் செய்யும் காலமாக இருப்பதால் அனைத்துக் காரியங்களிலும் கவனமாக செயல்படுதல் அவசியம்.
கன்னி ராஸி :
பொருள் சேதம் ஏற்படும். மனைவி மக்களால் மன வருத்தம் ஏற்படும். கூட்டுத் தொழிலில் பிரிவு உண்டாகும். அரசியல்வாதிகள் எச்சரிக்கையாய் செயல்படுதல் வேண்டும். அரசாங்க அதிகாரிகள் நிர்பந்திக்கப் படுவர். வாகனங்களால் விபத்து ஏற்படும். சிறை, நீதிமன்றம் என சிக்கல்களை உருவாக்கும் காலமாக இது இருக்கும்.
துலாம் ராஸி :
இவர்களுக்கு இது ஒரு பொற்காலம் ஆகும். விரோதிகள் சரணடைவர். நிலம், வீடு, வாகனம் போன்ற சொத்துக்கள் சேரும். அரசாங்க ஆதரவு கிடைக்கும். நண்பர்களால் நற்பலன் உண்டு. புதிய தொழில் முயற்சி மிகுந்த பலன் அளிக்கும். பயணங்களால் பண வரவு ஏற்படும்.
விருச்சிக ராஸி :
பொருள் சேதம் ஏற்படும். வீடு, மனை, நிலபுலன்களால் நஷ்டம் ஏற்படும். பூர்வீகச் சொத்து பலன் தராது. புத்திரர்களால் மனக்கிலேசம் உண்டாகும். இக்காலத்தில் புதிய தொழில் முயற்சியில் ஈடுபடுவது நல்லதல்ல. உடல் ஆரோக்யம் குறையும். தெய்வ வழிபாடு அதிகம் தேவை.
தனுசு ராஸி :
இது அர்த்தாஷ்ட்டம சனி காலம் ஆகும். உடலில் நோய் காணும். வாகனங்களால் பொருள் விரயமும், வீடு, நிலம் இவற்றின் மீது செலவுகளும் ஏற்படும். தாயாருக்கு துன்பத்தைக் கொடுக்கும் காலம் இது. நாற்கால் பிராணிகளால் ஆதாயம் இருக்காது.
மகர ராஸி :
ஏழரைச் சனி இவர்களை விட்டு விலகுவதால் இதுவரை இவர்கள் அனுபவித்து வந்த துன்பங்கள் அனைத்தும் நீங்கும். அரசாங்க ஆதரவு கிடைக்கும். உடன்பிறப்புகள் ஆதரவளிப்பார்கள். துணிச்சலான காரியங்களைச் செய்து வெற்றி பெறுவார்கள். பொன், பொருள், வீடு, மனை சேர்க்கை ஏற்படும்.
கும்ப ராஸி :
அதிக அலைச்சலும், தொழில் முடக்கமும், அநாவசிய பொருட் செலவும் ஏற்படும். குடும்பத்தில் குழப்பமும், செய்கின்ற காரியங்களில் தாமதமும் ஏற்படும். கல்வி தடைபடும். புதிய திட்டங்களை இக்காலத்தில் செயல்படுத்துவது நல்லதல்ல.
மீன ராஸி :
இது ஜன்மச் சனி காலம். சட்டத்தினால் தண்டனையும், காரியத் தடைகளும் ஏற்படும். பெரியோர் பகை, உரிமை பறிபோதல், மறதி போன்ற துர்பலன்கள் நடைபெறும். உடல் நலக் குறைவு ஏற்படும். வயோதிகர்கள் உரிய வைத்தியத்தையும், தெய்வ வழிபாட்டையும் கூடுதலாக செய்தல் வேண்டும்.
இவை அனைத்தும் இந்து ஜோதிட சாஸ்திர ரீதியான கோட்சார பொது பலன்களே. மற்ற கிரஹ சேர்க்கையாலும், பார்வையாலும் அவரவர் ஜாதக ரீதியான தசா புக்தியாலும் மேற்கூறப்பட்ட சனிப் பெயர்ச்சி பலன்கள் மாறுபடலாம். இக்காலத்தில் உரிய பரிகாரங்களுடன் சனி பகவானை முறையாக வழிபாடு செய்து வருவது நல்லது.
நிர்வாகி
கார்த்திகா ஜோதிடப் பயிற்சி நிலையம்,
227, ஹனுமந்தாபுரம், தாராபுரம் – 638 656,
தொலைபேசி : 04258 – 220883, 290883.
Mobile Phone : +91 94430 83109.
e-mail : karthikasiddarth@yahoo.co.in
