சனிப் பெயர்ச்சி பூஜை மற்றும் ஹோம விழா
ஸ்வஸ்திஸ்ரீ ஜய வருஷம் மார்கழி மாதம் 1 – ஆம் தேதி செவ்வாய்க்கிழமை (16-12-2014) அன்று பகல் 2-42 மணிக்கு வாக்கியப் பஞ்சாங்க ரீதியாக சனி பகவான் துலாம் ராஸியிலிருந்து விருச்சிக ராஸிக்குப் பெயர்ச்சியானதை முன்னிட்டு அன்று அதிகாலை 5-00 மணியிலிருந்து பூஜைகள் தொடங்கப்பட்டன.
இந்த பூஜையில் அர்ச்சனை மற்றும் பரிகாரங்கள் செய்து கொள்ள பதிவு செய்து கொண்டவர்களுக்கு சங்கல்பம் செய்யப்பட்டது. அதன் பின்னர் விக்னேஸ்வர பூஜை, கலச ஆவாஹனம், புண்யாஹவாஜனம், ஜபம் ஆகிய புனஸ்காரங்களுடன் பூஜைகள் ஆரம்பிக்கப்பட்டன. ஜபத்தின் தொடர்ச்சியான சகல விக்னங்களையும் நீக்கும் மஹா கணபதி ஹோமமும், சகல கிரஹ தோஷங்களை நீக்கும் நவகிரஹ ஹோமமும், நீண்ட ஆயுளை வழங்கும் ஆயுஷ்ய ஹோமமும், அவமிருத்துக்களிலிருந்து பாதுகாப்பு வழங்கும் மஹா ம்ருத்யுஞ்ஜய ஹோமமும், புத்ர சந்தான பாக்யத்தை வழங்கும் சந்தான கோபால கிருஷ்ண ஹோமமும், இறையருளை வேண்டி நிற்கும் புருஷ ஸுக்த ஹோமமும், அம்பாளின் அருளை வேண்டி நிற்கும் ஸ்ரீ ஸுக்த ஹோமமும், எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு வழங்கும் ஸ்ரீ துர்கா ஹோமமும், மஹா விஷ்ணுவின் அருளால் பில்லி சூன்ய ஏவல்கள், தீய சக்திகள் இவற்றிலிருந்து பாதுகாப்பு வழங்கும் மஹா சுதர்ஸன ஹோமமும், கல்வியையும் ஞானத்தையும் வழங்கும் சுப்ரமண்ய காயத்ரி ஹோமமும், தடைபட்டு வரும் திருமணத்தை தடங்கலின்றி நடத்திக் கொடுக்கும் சுயம்வரா பார்வதி ஹோமமும், செல்வத்தை அள்ளித் தரும் குபேர ஹோமமும், சேர்த்த சொத்துக்கள் சேதமாகாமல் இருக்கவும், கொடுத்த கடன் திரும்பக் கிடைக்கவும், உரிமைகள் பறி போகாமல் இருக்கவும் வகை செய்யும் கார்த்த வீர்யாய ஹோமமும், உலக மக்கள் க்ஷேமமாகவும், நாடுகளுக்கிடையே ஒற்றுமை நிலவ வேண்டும் என் வேண்டி மத்ய ஐக்கிய ஹோமமும், உலக மக்கள் நோய்களிலிருந்தும், வறுமையிலிருந்தும் விடுபட்டு சுகமான வாழ்வு வாழ வேண்டும் என்றும், நாட்டை ஆளும் தலைவர்களுக்கு நல்ல எண்ணத்தையும், மதி நுட்பத்தையும் வழங்க வேண்டும் என பிரார்த்தித்து இந்திர அபயங்கர ஹோமமும் செய்யப்பட்டன. பின்னர் பூர்ணாஹுதியும், வசோத்தாரையால் ஹோமமும் சிறப்பாக நடந்தேறியது. புனர் பூஜையுடன் பூர்வாங்க, பிரதான, உத்ராங்க பூஜைகள் அனைத்தும் தெய்வத் திருவருளால் நிறைவு பெற்றன.
இந்த பூஜைகள் மற்றும் ஹோமங்களின் சிறப்புகளைப் பற்றி அவ்வப்பொழுது கார்த்திகா குரு பீடத்தின் குருஜி அவர்கள் திருவுரை ஆற்றினார்கள். சனி பகவானால் வரும் சுப அசுப பலன்களையும் தெளிவாக விளக்கினார்கள்.
பங்கேற்ற வேத சாஸ்திரிகள்
சிறப்பு மிக்க இந்த பூஜைகளையும், ஹோமங்களையும் நெருஞ்சிப்பேட்டை ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரம் கனபாடிகள், ஸ்ரீ ராஜா சாஸ்திரிகள், ஈரோடு ஸ்ரீ ஹரிஹரன் சாஸ்திரிகள் ஆகியோர் தலைமையேற்று ப்ருஹஸ்பதியாகவும், பிரம்மாவாகவும் இருந்து வழி நடத்த பல வேத சாஸ்திரிகள் வேத மந்திரங்களால் பூஜைகளையும் ஹோமங்களையும் தெய்வத் திருவருளால் மிகச் சிறப்பாக நிறைவேற்றினார்கள்.தாராபுரம் கார்த்திகா ஜோதிடப் பயிற்சி நிலையத்தாரால் நடத்தப்பட்ட இந்த சனிப் பெயர்ச்சி பூஜை மற்றும் ஹோமங்களில் கலந்து கொள்வதற்கு வெளிநாட்டிலிருந்தும், இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்தும், தமிழ்நாட்டில் பிற மாவட்டங்களிலிருந்தும் ஆன்மீக அன்பர்களும், பொதுமக்களும் கார்த்திகா ஜோதிடப் பயிற்சி நிலைய மாணவர்களும் ஆயிரக்கணக்காக திரண்டு வந்திருந்து இந்த பூஜைகளில் கலந்து கொண்டு மன நிறைவோடு தெய்வ அருளைப் பெற்றுச் சென்றனர். பூஜைகளின் நிறைவில் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. வந்திருந்த அனைத்து ஆன்மீகப் பெருமக்களுக்கும் பூஜை பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
ஜோதிடப் பட்டமளிப்பு விழா
2013-2014 ஆம் ஆண்டில் கார்த்திகா ஜோதிடப் பயிற்சி நிலையத்தில் பயின்று ஆண்டு இறுதித் தேர்வு எழுதி வெற்றி பெற்ற ஜோதிட மாணவர்களுக்கு அன்று பிற்பகல் ஜோதிடப் பட்டங்களை குருநாதர் அவர்கள் வழங்கினார்கள்.
திறமையான செயலாற்றல்
இந்த சனிப் பெயர்ச்சி பூஜை மற்றும் ஹோம விழாவினை தாராபுரம் கார்த்திகா ஜோதிடப் பயிற்சிநிலைய நிர்வாகத்தினர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். கார்த்திகா ஜோதிடப் பேரவையின்செயலாளர் அரக்கோணம் ஜோதிட ரத்னா திரு. ஆர். விநாயகம், பொருளாளர் தாராபுரம் ஜோதிட ரத்னா திரு. தி. தங்கவேல் மற்றுமுள்ள செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் கார்த்திகா ஜோதிடப் பயிற்சி நிலைய ஜோதிட மாணவர்கள் ஆகியோர் திறம்பட செயலாற்றி இந்த பூஜைகள் சிறப்பாக நடக்க உறுதுணையாக இருந்தார்கள்.சனிப் பெயர்ச்சி பூஜை மற்றும் ஹோம விழாவின் இறுதியில் ஆன்மீகப் பொதுமக்கள் அனைவருக்கும் தாராபுரம் கார்த்திகா ஜோதிடப் பயிற்சி நிலையத்தின் குருநாதர் அவர்கள் நல்லாசி வழங்கினார்கள்.
இலவச ஜோதிட முகாம்
தாராபுரம் கார்த்திகா ஜோதிடப் பயிற்சி நிலையத்தின் சார்பாக ஜோதிட அபிமானிகளுக்கும், ஆன்மீக அன்பர்களுக்கும் ஜோதிட சேவை செய்யும் நோக்கத்துடன் 15-12-2014 திங்கட்கிழமையன்று காலை 9-00 மணி முதல் மாலை 5-00 மணி வரை ஒருநாள் இலவச ஜோதிட சேவை நடைபெற்றது.இந்த இலவச ஜோதிட முகாமின் பொழுது ஆயுள், நோய், எதிரிகள் தொல்லை, தோஷங்கள், விபத்து, பொருளாதாரம், உத்யோகம், தொழில், விவசாயம், வியாபாரம், சொத்துக்கள், நீதிமன்ற விவகாரம், கல்வி, செய்வினைக் கோளாறு, அரசியல், குடும்பத்தில் குழப்பம், புத்ர பாக்கியம், திருமணம், வெளிநாட்டுப் பயணம், முன் ஜென்ம தீவினைகள், பில்லி சூன்யம், ஏவல் உபாதைகள், உடன்பிறப்பு ஆதரவு, தாய் தந்தை மேன்மை, பரிகாரம், தெய்வ வழிபாட்டு முறைகள் போன்ற அனைத்து ஜாதக விஷயங்கள் மீதும் தெளிவான ஜோதிட ஆலோசனை திறமைமிக்க ஜோதிடர்களால் வழங்கப்பட்டன. அதுமட்டுமல்லாமல், கைரேகை ஜோதிடம், எண்கணித ஜோதிடம், வாஸ்து சாஸ்திரம், நவரத்னக் கற்கள் பிரயோகம், நீரூற்று போன்றவை குறித்தும் ஜோதிட அபிமானிகளுக்கு திறம்பட ஜோதிட ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
இந்த இலவச ஜோதிட முகாமில் நூற்றுக்கணக்கான மக்கள் ஜோதிட ஆலோசனை பெற்றுச் சென்றனர்.
தாராபுரம் கார்த்திகா ஜோதிடப் பயிற்சி நிலையம் நடத்திய இந்த இலவச ஜோதிட முகாமில் கீழ்க்கண்ட ஜோதிட வித்வான்கள் பங்கேற்று இலவச ஜோதிட ஆலோசனைகள் வழங்கி பலரும் பாராட்டும் வகையில் திறமையாக செயலாற்றினர்.
1. திரு. தி. தங்கவேல், தாராபுரம்.
2. திரு. ஆர் விநாயகம், அரக்கோணம்.
3. திரு. ப. பெரியசாமி, சேலம்.
4. திரு. பி. கே. கிருஷ்ணன், ஒத்தக்குதிரை.
5. திரு. சி. பி. சுப்பிரமணியம், திருப்பூர்.
6. திரு. வி. எஸ். ஸ்வாமி, மூலனூர்.
7. திரு. சி. தண்டபாணி, செங்காட்டுப்பாளையம்.
8. திரு. பி. முருகானந்தம், நாமக்கல்.
9. திரு. ஆர். அம்மாசை, காராப்பாடி.
10. திரு. எ. ராஜசேகரன், வெள்ளகோவில்.
11. திரு. எ. சதாசிவம், பாண்டிச்சேரி.
12. திரு. கே. லிங்கசாமி, அறச்சலூர்.
13. திரு. கே. பாலஸ்ரீனிவாசன், கோட்டையூர்.
14. திரு. வெ. அய்யாசாமி, காடப்பநல்லூர்.
இந்த ஜோதிட வல்லுநர்களை பாராட்டும் வகையில் 16-12-2014 அன்று நடந்த பட்டமளிப்பு விழாவில் அவர்களுக்கு ஜோதிட பூஷணம் என்ற கௌரவ ஜோதிடப் பட்டம் வழங்கப்பட்டன.
மேலும் இந்த இலவச ஜோதிட முகாமினை சிறப்புற நடத்த கீழ்க்கண்ட ஜோதிட மாணவ மணிகளும் சேவை செம்மல்களும் உதவிகரமாக இருந்து சிறப்பாக சேவை புரிந்தனர்.
1. திரு. ஆர். கருப்புசாமி, சென்னிமலை.
2. திரு. என். ஜெனார்த்தனன், பாண்டிச்சேரி.
3. திரு. வி. நவீன்குமார், அரக்கோணம்.
4. திருமதி. வி. பிரபாவதி, அரக்கோணம்.
5. திரு. எம். நாச்சியப்பன், கரூர்.
கார்த்திகா ஜோதிடப் பயிற்சி நிலையத்தின் குருநாதர் இவர்களைப் பாராட்டி நல்லாசி வழங்கினார்கள். 15-12-2014 அன்று மாலை 6-00 மணியளவில் இலவச ஜோதிட முகாம் இனிதே நிறைவு பெற்றது.